ஶ்ரீ.ல.சு.க.உறுப்பினர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் நான் முன்நிற்பேன் என்கிறார் துமிந்த
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் அவர்களைப் பாதுகாக்க நான் முன்நிற்பேன் - துமிந்த திசாநாயக்க
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16
உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமானால், அவர்களைப்
பாதுகாப்பதற்காக தாம் முன்நிற்கப் போவதாக கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர்
துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக
கூட்டு எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின்
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 16
பேருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை
கொண்டுவரப்பட்டால் அவர்களை பாதுகாப்பதற்கு தாம் முன்நிற்பதாக அவர் கூறியுள்ளார்.
விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் என்ற
வகையில், அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு முதுகெலும்புடன்
செயற்பட்டவர்களால், கட்சியினரைப் பாதுகாப்பதற்கும் அதே திராணியுடன் செயற்பட
முடியும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு
வழங்கியவர்களுடன் கூட்டாக செயற்படுவதில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எவ்வித
சிக்கலும் காணப்படவில்லை என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
கட்சி என்ற வகையில் பெரும்பான்மையினரின்
அபிப்பிராயத்திற்கும், ஏனையோரின் அபிப்பிராயத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றமாக
நடந்துகொண்டவர்கள் மீது கட்சி ரீதியில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
No comments