உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பிரதமரை எதிர்த்த ஶ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் பதவி விலக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்கள் 16 பேரும் தங்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேசிய அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகி, கட்சியினுள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்குமாறும் இவர்கள் கேட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமைய அடுத்த கட்ட செயற்பாடுகளை தமது குழு முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து விரிவாகக் கலந்துரையாடுவதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன ஆகிய 6 பேரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இராஜாங்க அமைச்சர்களான லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, டி.பி. ஏக்கநாயக்க, டிலான் பெரேரா மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும்,
பிரதியமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, அனுராத ஜயரத்ன, சுமேதா ஜீ. ஜயசேன, லக்‌ஷ்மன் வசந்த மற்றும் தாராநாத் பஸ்நாயகக்க ஆகியோருடன் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்டவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இந்த 16 உறுப்பினர்களுக்கும் எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் சபாநாயகரிடம் நேற்று (06) நம்பிக்கையில்லா பிரேரணைகளை கையளித்திருந்தனர்.

எனினும், அந்த நம்பிக்கையில்லா பிரேரணைகளை மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

No comments