உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இடர் வலயங்களான 06 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

 கொரோனா இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 01, புதன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம கிராமம் ஆகியன முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


No comments