உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 மானியம் 5000 ரூபா பகிர்வில் பாரபட்சம்

கொவிட்-19 வைரஸ் பரவுகையால் நாடளாவிய ரீதியில் கடந்த ஒன்றரை மாதகாலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் கடந்த ஒன்றரை மாதகாலமாக தங்களின் நாளாந்த ஜீவியத்தை முன்னெடுப்பதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு உதவும் வகையில், கொவிட்-19 மானியம் நாடு முழுவதும் சுமார் 60 இலட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

கொவிட்-19 ஒழிப்புக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் கீழ் வழங்கப்படும் இந்த மானியத் தொகை உரியவாறு மக்களுக்கு சென்றடையவில்லை என்று ஆங்காங்கே குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிதி பகிர்ந்தளிப்பு பல்வேறு இடங்களில் முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமையளித்து வழங்கப்படவில்லை என்றும், மாறாக வசதி படைத்தவர்களும், சொகுசு வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஊரடங்கினால் வருமான மார்க்கங்களை இழந்து வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கு கிராம உத்தியோகத்தர்களும், சமூர்த்தி உத்தியோகத்தர்களும் முறையாக பகிர்ந்தளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, கண்டி - தென்னக்கும்புர வலயத்தில் மக்களுக்கான கொவிட்-19 மானிய உதவி உரிய வகையில் இடம்பெறவில்லை என்று கங்கவட்ட கோரளை பிரதேச சபையின் உறுப்பினர் சிசிர ரணசிங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளதுடன், 5000 ரூபா பகிர்ந்தளிப்பு நிறைவடைந்த பின்னர் அதுகுறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி ஆராய்ந்து பாரக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தகரக் கொட்டில்களில் வாழ்கின்ற மக்கள் மற்றும் கணவர் வௌிநாடுகளில் உள்ள பெண் தலைமைத்துவ நடுத்தர குடும்பங்களையும் தேடியறிந்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
No comments