உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இத்தேபான தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு

மகாநாயக்கர் இத்தேபான தம்மாலோக தேரர், கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் ஜனாதிபதியுடன் இன்று (28) கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து கோட்டே விஹாரையின் மாகாநாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலோக தேரர் மற்றும் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கொவிட்-19 வைரஸ் பரவுவதில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை இரண்டு மதகுருமார்களும் இதன்போது பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் இருந்தவாறே மக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு வேண்டுகோள் விடுப்பதாக இத்தேபான தேரர் ஜனாதிபதியிடம் தௌிவுபடுத்தியதுடன், அதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.

இதனையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து ஜனாதிபதியிடம் கேட்டறிந்துகொண்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சம்பவத்தின் பின்புலத்தில் இருப்பவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நோக்கத்தின் பின்புலத்தில் இருப்பவர்களை கண்டறிவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் புதிய தேர்தல் முறைமை குறித்தும் ஜனாதிபதிக்கும், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கும் இடையில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

வீண்விரயம், வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக ஏதுவான தேர்தல் பிரசார முறைமையில் இருந்து விலகி புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என கர்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி தேர்தல் பிரசார முறைமையை மாற்றுவது குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments