உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஊரடங்கிற்கு மத்தியில் மின்சார, நீர்குழாய்ப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

கொவிட்-19 அச்சத்திற்கு மத்தியில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மின்சார கட்டமைப்பு மற்றும் நீர்க்குழாய் பிரச்சினைகள் குறித்து பாவனையாளர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கை மின்சார சபை, தனியார் மின்சார நிறுவனம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணைந்து நாளை (05) முதல் இந்த விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட அவசர அழைப்பு சேவையின் ஊடாக பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின்சார கட்டமைப்பு மற்றும் நீர்குழாய் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பாவனையாளர்கள் தங்களின் வீடுகளுக்கு அருகாமையிலுள்ள மின்னியலாளர் அல்லது குழாய் திருத்தப் பணியாளரின் உதவியைப் பெற்றுக்கொள்ள  முடியும்.

இந்த முயற்சியின் ஒரு கட்டமாக நாட்டிலுள்ள மின்னியலாளர்கள் மற்றும் நீர்குழாய் திருத்த பணியாளர்களின் விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தளம் தயாரிக்கப்பட்டு பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்குவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முதல்கட்டமாக இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சேவைக்கான நியாயமான கட்டணமொன்று அறவிடப்படுவதுடன், அதற்காக அங்கீகரிக்கப்பட்ட பற்றுச்சீட்டு ஒன்றை விநியோகிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நீர்குழாய்களில் பிரச்சினைகள் காணப்படுமாயின், அதுகுறித்து பாவனையாளர்கள் 1939 க்கும், மின்சார கட்டமைப்பில் பிரச்சினை காணப்படுமாயின், 1987 என்ற அவசர இலக்கத்திற்கும் அழைப்பை ஏற்படுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

அத்துடன், இந்த புதிய சேவை தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்வதற்கு 076 427 10 30 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாவனையாளர்களிடம் கேட்டுள்ளது.






No comments