உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பாராளுமன்ற தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரியவுக்கு ஜனாதிபதி செயலாளரினால் காரசாரமான விளக்கம்

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து நீதிமன்றத்தை நாடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என ஜனாதிபதி செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு காரசாரமான பதிலளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி (31-03-2020) மற்றும் ஏப்ரல் 01 ஆம் திகதி (01-04-2020) குறிப்பிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு அனுப்பியிருந்த கடிதங்களுக்கு ஜனாதிபதி செயலாளரினால் 06 ஆம் திகதி (06-04-2020) பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

"2020 ஆம் ஆண்டு்க்கான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கும் திகதி" எனும் தலைப்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவரால் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கடிதம் தனது அலுவலகத்திற்கு கிடைப்பதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டமை மற்றும் அந்த கடிதங்கள் வேறு தரப்பினருக்கு பிரதியாக்கம் செய்யப்பட்டிருந்தமை ஆகிய காரணங்கள் குறித்து தாம் ஆச்சரியமடைந்ததாக ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், புதிய பாராளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூட்டப்புடம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியில் புதிய பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி (25-04-2020) நடத்தப்படும் என திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கென அரசியல் கட்சிகள் பலவற்றின் செயலார்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தத்தமது விருப்பங்களை வௌியிட்டதுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் பல வேட்பாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16 ஆம் மற்றும் 17 ஆம் சரத்துகளின் பிரகாரம் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த சூழ்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாதெனவும், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குள் வருகின்ற ஒரு தினத்தில் தேர்தலுக்கான திகதியை பிரகடனம் செய்வதாகவும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி (21-03-2020) 2167/19 என்ற அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த பின்புலத்தில் தேர்தல்கள் சட்டத்தின் 24(03) சரத்தின் கீழ் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் புதிய திகதியொன்றை அறிவிப்பதற்கான கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதென ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதைக் குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் மே மாதம் 28 ஆம் திகதி (28-05-2020) அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்தமுடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்கமுடியாது எனவும், தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளிலும், பொறுப்புகளிலும் தலையீடு செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லையென்றும் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு காரசாரமாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பிற்போடப்பட்டுள்ள தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கும் காலவரையறை பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(03) சரத்தின் விதிமுறைகளுக்கு அமைய 14 நாட்களுக்கு குறையாத காலம் என்பதுடன், பிற்போடப்பட்ட தேர்தலை 15 ஆவது தினத்தில்கூட நடத்தமுடியும் என சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கினை அளிப்பதற்கு இந்த நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளதுடன், அது மக்களின் இறைமையாகும் என்றும் தாம் சுட்டிக்காட்டத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி செயலாளரின் கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேற்கூறிய காரணங்களை கவனத்தில் எடுக்கும்போது அரசியலமைப்பின் 129 ஆவது சரத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கான தேவை ஏற்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மேலும் தௌிவுபடுத்தியுள்ளார்.



No comments