உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

உறுதிப்படுத்தாமல் மலையகத்தில் கொரொனா பீதியை உருவாக்குவது பொறுப்பற்ற செயலாகும் - திலகராஜ் தெரிவிப்பு

தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி 7 பேர் தப்பிச்சென்று அங்கு அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி 7000 பேர் தப்பிச்சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலை பொறுப்பு வாய்ந்தவர்கள்  தெரிவிப்பது பொறுப்பற்ற செயலாகும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையகத்திற்கு குறிப்பாக நுவரெலியா மாவட்டத்துக்குள் 7000 மலையக இளைஞர்கள் தலைநகரில் இருந்து ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி தெரியாது என்றும் அவர்களுக்கு தொற்று இருக்கலாம் எனவும் சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஓரிரு நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி விடுத்திருக்கும்  அறிக்கை ஒன்றலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மலையகப் பகுதிகளில் இருந்து  பல்வேறு தொழில்கள் நிமித்தமும் வேறு அலுவல்கள் சார்ந்தும் தலைநகரில் வாழ்ந்தவர்கள் , தற்காலிகமாக வந்தவர்கள் திரும்பவும் தமது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முடியாத வகையில் கொழும்பு மாவட்டம் முடக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சில இளைஞர்கள் புறக்கோட்டைப் பகுதியில் இருந்து ஊர் திரும்ப  வழியின்றி சிக்குண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியான தகவல்களை அடுத்து, தாமதமாகவேனும் குறித்த அமைச்சு சார்ந்தவர்கள் எடுத்த  நடவடிக்கைகளை நாம் வரவேற்றிருந்தோம்.

அதேநேரம் இப்போது 7000 மலையக இளைஞர், யுவதிகள் தலைநகரில் இருந்து மலையகம் நோக்கி வருகை தந்துள்ளதாக அமைச்சர் ஒருவரே கூறுவது மலையகத்தில் கொரொனா தொடர்பான அச்சுறுத்தலையும் பீதியையும் உருவாக்குவதாகும் என திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் முழுதும்  கொரொனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் கொரொனா சார்ந்து உணவுத்தட்டுப்பாடுகளும் நிவாரணக் கொடுப்பனவு பிரச்சினைகளும் எழுந்துள்ளனவே அன்றி கொரொனா பீதி ஏற்படவில்லை. டிக்கோயா  போன்ற ஒரு பகுதிகளிலே அந்த அச்சம் எழுந்த போதும் அவை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது தொற்று இல்லை என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 7000 இளைஞர் யுவதிகள் தலைநகரில் இருந்து தப்பி வந்துள்ளதாகவும் அவர்களில் நோய்த் தொற்று உள்ளவர்கள் இருக்கலாம் என்றும்  பீதியை உருவாக்கி தாங்கள் முன்னெடுப்பதாக கூறும் கொரொனா நிவாரணக் கொடுப்பனவுகளில் உள்ள குறைபாடுகளை மறைக்க முயலக்கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இவ்வான கருத்துகளை கூறும்போது, அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அவர்கள் பற்றிய விபரங்களை வௌியிடுவதும், அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலைத் தடுப்பதும் இந்த கருத்தைத் தெரிவிக்கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சரே முன்னெடுக்க வேண்டும்.

அத்தகைய நடவடிக்கைகளை இலங்கையின் சுகாதார பிரிவும் பாதுகாப்பு பிரிவும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் நிலையில் மலையகத்துக்கும், ட்ரஸ்ட் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாக கூறுவதும், இந்த இக்கட்டான நிலையிலும் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கும் செயலாகும்  எனவும் திலகராஜ் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments