உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கண்டியில் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான நிவாரணப் பொதியில் மோசடி

கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தினால் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொதிகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது

கொவிட்-19 வைரஸ் பரவுவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் மக்களின் நிலைமைகளை அறிக்கையிடுவதற்கான கள செய்தி சேகரிப்பில் ஈடுபடும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்காக கண்டி மாவட்ட செயலாளர் திஸ்ஸ கருணாரத்னவின் முயற்சியால் நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட சுயாதீன ஊடகவியலாளர்கள் 15 பேருக்கு இந்த நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொதிகளுக்காக பெயரிடப்பட்டிருந்த 15 சுயாதீன ஊடகவியலாளர்களுக்கும் அவற்றை தாமே விநியோகிப்பதாகக்கூறி மற்றுமொரு ஊடகவியலாளர் எனக் கூறிக்கொள்ளும் நபர் பெற்றுச் சென்றுள்ளார்.

இதனைக் கேள்வியுற்ற சில சிரேஷ்ட சுயாதீன ஊடகவியலாளர்கள் கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளனர்.

இதன்போது தங்களின் பெயரும் அந்த 15 பேர் அடங்கிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமை மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை அறிந்துகொள்ள முடிந்ததாக அந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்கள Kandy Tamil News க்கு கூறினார்கள்.

இதனையடுத்து, உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக குறிப்பிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு நடந்த விடயங்களை தௌிவுபடுத்தியுள்ளனர்.

எனினும், நிவாரணப் பொதிகள் வழங்கும் பட்டியலில் குறிப்பிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டதுடன், அதுகுறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இத்தகைய அனர்த்த சூழ்நிலையில் விநியோகிக்கப்படும் நிவாரணப் பொதிகளைக்கூட விட்டுவைக்காத இத்தகைய ஊடகவியலாளர் என்ற போர்வையில் இருக்கும் சில மோசடி பேர்வழிகளால் ஊடகத்துறைக்கே இழுக்கு என்று பாதிக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், எதிர்காலத்திலேனும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக விடயங்களைக் கையாள்வது அவசியமாகும்.

No comments