உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 சூழ்நிலை, பொருளாதார சவால்கள் குறித்து அமெரிக்க தூதுவருக்கும், பிரதமருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு (PHOTOS)

 

கொவிட்-19 வைரஸ் பரவுகை, பொருளாதாரம் மற்றும் கூட்டாக செயலாற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இன்று (05) கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவருக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது

மேற்குறிப்பிட்ட விடயங்களுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம், கொவிட்-19 இன் பின்னரான பொருளாதார சவால்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற கூட்டு ஒத்துழைப்புகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பொதுமக்களின் சுகாதாரம் சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும், இலங்கையுடன் உறுதியான ஒரு பங்காளராக இருப்பதற்கு அமெரிக்கா விரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து இலங்கையின் ஆடைத்துறையை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் உதவியை பெற்றுத்தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.

அத்துடன் இலங்கையிலுள்ள சில முன்னணி ஆடைக் கைத்தொழில் நிறுவனங்கள், சர்வதேச நாடுகளில் கேள்வி நிலவும் சுயபாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து வருவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரின் கோரிக்கை தொடர்பாக தாம் கவனம் செலுத்துவதாகவும், ஏற்கனவே தமது நாட்டு கொள்வனவாளர்களை இணைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கத் தூதரகம் ஈடுபாடு காட்டியுள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடியான நிலைமையில் இருந்து இலங்கையின் பல்தேசிய நிறுவனங்களும், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீள்வதை அமெரிக்கா காண விரும்புவதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இரண்டு நாடுகளிலும் எதிர்வரக்கூடிய தேர்தல்கள் மற்றும் நிலுவையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் கவனம் செலுத்தப்படும் முறைகள் குறித்தும் இருதரப்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.




No comments