உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மனு தாக்கல்

கொவிட்-19 வைரஸ் பாதிப்பினால் உயிரிப்பவர்களின் உடல்களை  தகனம் செய்வதற்கு எதிராக அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக இந்த மனு, இன்று (14) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் ௦4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் இந்த மனுவை முன்வைத்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைமுறையில் இருந்துவரும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்றுநோய்களால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடும் இருக்கத்தக்க நிலையிலேயே, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டுமென, திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக் கட்டளைச் சட்டம், வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் திருத்தப்பட்டமையை வலுவிழக்கச் செய்து, கொவிட் – 19 வைரஸினால் உயிரிழப்பவர்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென மீளத் திருத்தி வெளியிடுவதற்கான உத்தரவென்றைப் பிறப்பிக்க வேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரணித்த உடலை அடக்கம் செய்வதைவிட தகனம் செய்வதால் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் என்ற விஞ்ஞான ரீதியான எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையிலும், உலகத்தில் மில்லியன் கணக்கானோருக்கு கொவிட் – 19 வைரஸ் பரவியிருக்கும் சூழ்நிலையிலும், உயிரிழந்த இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் பல நாடுகளில் அடக்கப்பட்டிருப்பதையும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், உலக நாடுகளில் இதுவரை அடக்கம் செய்யப்பட்டவர்களில் எந்தவொரு உடலத்திலிருந்தும் நோய் பரவியதாக ஒரு அறிக்கையேனும் இல்லையெனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருப்பதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இடைக்கால வழிகாட்டலில், இந்த இரண்டு தேர்வுகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாகவும் மனுதாரர்கள் தங்களின் அடிப்படை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனவே, இந்த விடயங்களை வலுவான காரணங்களாக ஏற்று, நீதியைப் பெற்றுத்தருமாறு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments