உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் - முழு விபரங்களையும் மஹிந்தவிடம் கையளித்தார் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரிடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் (12) நடைபெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர், சுமந்திரனிடம் கேட்டறிந்ததார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படியும் பிரதமர் கேட்டிருந்தார்.

இதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணத்தின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை சுமந்திரன் பிரதமரிடம் கையளித்துள்ளார்.

இந்த கைதிகளில் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசுவதாக குறிப்பிட்ட பிரதமர், சுமந்திரனையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஏனையோர்  தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக இதன்போது பிரதமர் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர், தாம்  புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும், ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் இதனை உறுதி செய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

புதிய பாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளுக்கு அத்தியாவசியமாகும் என பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளுக்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு  முன்னுரிமை  வழங்கப்படுவதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நீடித்த இந்த கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்ததாக மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














No comments