உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தமிழ் சிறைக் கைதிகள் விவகாரம் குறித்து மஹிந்த - டக்ளஸ் முக்கிய கலந்துரையாடல் (PHOTOS)

வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் இன்று (12) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது வடக்கைச் சேர்ந்த சிறைக்கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பு விஜேராம இல்லத்தில் நடைபெற்றது.

வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குறிப்பாக மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வடபகுதியைச் சேர்ந்த தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய கவனத்தை செலுத்தவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடி துறைமுகமாக மாற்றுவதன் ஊடாக வடபகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இயலுமென இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டம் காலத்திற்கு உகந்த ஒன்றென்பதால், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இலங்கையில் ஆறு ரின் மீன் தொழில்சாலைகள் இயங்குகின்ற போதிலும் தொழிற்சாலைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக அமைச்சரினால் பிரமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களுக்கான வரி குறைக்கப்படுமாயின், அது உள்ளூர் மீன் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் என டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து ரின் மீன் உற்பத்தியாளர்களிடம் எதிர்காலத்தில் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் பதிலளித்தார்.

மேலும் மீனவர்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமருக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் நிலைமையினால் கொழும்பில் விடுதிகளில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள வடபகுதி மக்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தனது அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், தெஹிவலை, ரத்மலானை, கல்கிஸ்ஸ பிரதேசங்களில் தங்கியுள்ளவர்களை தத்தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தௌிவுபடுத்தினார்.

இந்த சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன், அந்த கட்சியின் சில முக்கியஸ்தர்களும், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் மற்றும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியான் பந்துவிக்ரம உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.










CoronaVirus, COVID19, COVID-19, CURFEW, Local, Social Media, Srilanka, Tamils

No comments