உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

தனிநபர் தொழுகைக்காக 15 ஆம் திகதி முதல் பள்ளிவாயல்கள் திறப்பு

மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேச பள்ளிவாசல்கள் தனிநபர் தொழுகைக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி (15-06-2020) முதல் திறக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவர்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பள்ளிவாயல்களை மீளத் திறப்பது தொடர்பாக திணைக்களத்தினால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பின்வரும் கண்டிப்பான நிபந்தனைகள் சில வௌியிடப்பட்டுள்ளன.

  1. பள்ளிவாயல்களை மீளத் திறப்பதற்கு முன்னர் சகல தர்மகர்த்தாக்களும் அல்லது பொறுப்புதாரிகளும் பள்ளிவாயல்களையும் அதன் வளாகத்தினையும் பொது சுகாதார கண்காணிப்பாளர் (PHI) அல்லது சுகாதார வைத்திய அதிகாரியின் (MOH) கண்காணிப்பின் கீழ் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
  2. பள்ளிவாயலினுள் நுழைவது ஒரு வாயிலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  3. ஒவ்வொரு தொழுகையாளிக்கும் இடையில் தரையில் ஒரு மீற்றர் இடைவௌியை தொழுவதற்கு அனுமதியற்ற பகுதியாக தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்பாளிகள் அடையாளமிடல் வேண்டும்.
  4. தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்பாளிகள் பள்ளிவாயலின் நுழைவாயிலில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
  5. இதேவேளை, சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டு தொழுகையைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்பட வேண்டும். மீண்டும் லுஹர் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாயல் திறக்கப்பட்டு இஷா தொழுகையைத் தொடர்ந்து 45 நிமிடங்களின் பின்னர் மூடப்படல் வேண்டும்.
  6. மேலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வழமையான அல்லது விசேட கூட்டுத் தொழுகைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. ஆகவே ஐவேளை இமாம் ஜமாஅத் மற்றும்/ அல்லது ஜும்ஆத் தொழுகை மற்றும் / அல்லது ஏனைய கூட்டுத் தொழுகைகள் மற்றும் / அல்லது நிகாஹ் மஜ்லிஸ் மற்றும் / அல்லது வேறு ஏதேனும் கூட்டு சமய செயற்பாடுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
  7. ஒரே நேரத்தில் 30 பேர் அல்லது அதைவிடக் குறைவானவர்கள் மட்டுமே தனிநபர் தொழுகைக்காக பள்ளிவாயிலினுள் அனுமதிக்கப்படுவார்கள்.
  8. பள்ளிவாயலினுள் இருக்கும்போது ஒவ்வொருவரும் முகமறைப்பை (Mask) அணிந்திருப்பதோடு ஒரு மீற்றர் இடைவௌியையும் பேணுதல் அவசியம்.
  9. வுழு செய்யும்பகுதி மற்றும் கழிவறைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்பதுடன், பள்ளிவாயலுக்குள் வரும் அனைவரும் வுழுச் செய்துகொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  10. தரைவிரிப்பு போடப்பட்டுள்ள பள்ளிவாயல்களில் அந்த தரைவிரிப்பின் மீது தொழுவது அனுமதிக்கப்படக்கூடாது. மாறாக தரைவிரிப்பு அற்ற பகுதியில் தொழுகையை மேற்கொள்ள வேண்டும்.
  11. பள்ளிவாயலுக்கு வருகின்ற ஒவ்வொருவரும் தமக்கென தொழுகை விரிப்பை (முஸல்லா) எடுத்துவருவதோடு பள்ளியில் இருந்து வௌியேறும்போது அதனைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட வேண்டும்.
  12. பள்ளிவாயலைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினால் கொவிட்-19 தொடர்பாக வழங்கப்படும் வழிகாட்டல்களயைும், பணிப்புரைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சுகாதாரத்துறை மற்றும் / அல்லது பாதுகாப்புத் துறையினால் இ்ந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது இலங்கை வக்ப் சபை மேலதிக பணிப்புரைகளை வழங்கும் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.




No comments