உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

காரணமின்றி வௌியேற்றிய ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்க மறுக்கும் லைக்கா நிறுவனம் - தொழில் நியாயாதிக்க வழக்கு தொடர்கிறது

லைக்கா நிறுவனத்திற்குச் சொந்தமான ஆதவன் செய்திச் சேவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மூவர் தொழில் நியாயாதிக்க பட்டியலின் பிரகாரம் வழக்கை முடித்துக்கொள்ள தீர்மானித்தமைக்கு அமைவாக அவர்களுக்கான தொகையை உடன் வழங்குமாறு தொழில் நியாயாதிக்க சபை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எந்த விதமான முன்னறிவித்தலோ அல்லது உரிய காரணங்களோ இல்லாமல், வெறும் 4 மணித்தியாலங்களில் லைக்கா நிறுவனம் கடந்த வருடம் தமது பணியாளர்களை விலக்கியது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரி இந்த பணியாளர்களில் நால்வர் தொழில் நியாயாதிக்க சபையில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். 

சுமார் ஒருவருட காலமாக நீடித்த இந்த வழக்கில் லைக்கா நிறுவனம் எவ்வித உடன்பாட்டுக்கும் வராத காரணத்தால் விரக்தியடைந்த மேற்படி பணியாளர்கள் தொழில் திணைக்கள பட்டியலின் பிரகாரம் வழக்கை முடித்துக்கொள்ள நேற்று (07.07.2020) தீர்மானித்தனர்.

குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்திச் சேவையில் செய்தி முகாமையாளராக பணியாற்றிய கலாவர்ஷ்னி கனகரட்ணம் குறித்த பட்டியலுக்கு இணங்கவில்லை. அத்தோடு, தனக்கு நியாயம் கிடைக்கும்வரை போராடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்ததாகவும் அவற்றை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், பணியாளர்கள் மீது இடம்பெறும் அத்துமீறல்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக கூறினார்.

தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் சில விடயங்களை தெரிவிக்க முடியாதென்றும் தீர்ப்பு வெளியாகிய பின்னர், அந்த நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற விடயங்களை தான் வெளிப்படுத்தவுள்ளதாகவும் கலாவர்ஷ்னி குறிப்பிட்டார்.

மேற்படி வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

லண்டனை தலைமையகமாகக் கொண்ட லைக்கா நிறுவனம் அங்கு தொலைதொடர்பு சேவையில் முதனிலையில் விளங்குகின்றது. பல்வேறு நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள லைக்கா நிறுவனம் இலங்கையில் சுவர்ணவாஹினி போன்ற ஊடக நிறுவனங்கள், சவோய் சினிமா, ஹோட்டல் சஃபயர் என பலவற்றை விலைகொடுத்து வாங்கியுள்ளது. அதுமாத்திரமன்றி லைக்கா புரடக்ஷன் தென்னிந்திய சினிமாவில் கோடிக்கணக்கில் செலவழித்து திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. 

இப்படி செல்வாக்கு மிக்க நிறுவனத்தில் இடம்பெற்ற இந்த சட்டவிரோத பணிநீக்கம் நீதிமன்றம் வரை சென்ற பின்னர், அதற்கு பின்னர் பணிநீக்கம் செய்தவர்களுக்கு சேரவேண்டிய தொகையை லைக்கா நிறுவனம் வழங்கியுள்ளது. சிலரை தமது புதிய நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த முற்பட்ட போதும், தமது சக தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சுட்டிக்காட்டியதோடு, தமக்கும் இந்நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டு அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

No comments