உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: குருநாகலில் தொல்பொருள் கட்டட சேதம் - பிரதமரினால் விசாரணைகுழு நியமனம்


13 ஆம் நூற்றாண்டில் குருநாகல் இராசதானிக்கு சொந்தமான தொல்பொருள் கட்டடங்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  இந்த விசாரணக் குழுவை நியமித்துள்ளார்.

தொல்பொருள் பெறுமதியான கட்டடங்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனையடுத்து புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் தலைவராக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க செயற்படுவதுடன், குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்ல எம். ரத்நாயக்க, தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் டி.பி. குலதுங்க, கலாசார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க, கலாசார நிதியத்தின் பணிப்பாளரும் வாஸ்துவியல் நிபுணருமான சுமேதா மாதொட்ட ஆகியோரும் குழுவிற்குப் பெயரிடப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு (23-07-2020) முன்னர் இந்த குழுவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள குறிப்பிட்ட சேதமாக்கப்பட்டுள்ள தொல்பொருள் கட்டடம் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ், தொல்பொருள் பெறுமதிவாய்ந்த ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.No comments