தேர்தல் பிரசாரங்களுக்கு பெருந்தொகை பணம் செலவிடும் பிரமுகர்கள் உண்மையிலேயே மக்கள் சேவகர்களா?
எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில் தேர்லில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளும் பல்வேறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாடுகளில் பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கம், இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. சுமார் 2700 பேர் வரை கொவிட்-19 தொற்றுக்கு இலக்கானமை
உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார
வழிகாட்டல்களுக்கு அமைவாக தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுகின்றனவா என்பது
கேள்விக்குறியாகும்.
எவ்வாறாயினும், இம்முறை நேரடியாக களத்தில் இறங்கி வீடு வீடாகச்
சென்று வாக்குகளை கோருவதற்கும், மக்கள் சந்திப்புகளை
ஏற்பாடு செய்வதற்கும் வேட்பாளர்களுக்கு கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்கள் பெரும்
இடையூறாக இருப்பதைக் காணலாம். இதன் காரணமாக பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள்
ஆதரவாளர்களைக் கொண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களிலும், தேசிய செய்திப் பத்திரிகைளிலும், ஒன்லைன்
மூலமாகவும் டிஜிட்டல் முறையிலான பல்வேறு விளம்பர வழிமுறைகளைப் பின்பற்றுவதில் அதிக
ஆர்வம் காட்டுகின்றனர்
மறுபுறத்தில் செய்திப்
பத்திரகைகளிலும், இணையவழி
செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகப் பரப்புகளிலும் அதிக தொகை
பணம் செலுத்தி தங்களின் தேர்தல் விளம்பரங்கள் மூலமான பரப்புரைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களிலும், வட்ஸ் அப் செயலி ஊடாகவும் 18 வயது முதல் 65 வயது வரையான பல்வேறு வயதுப்
பிரிவினரைக் கவரும் விதமாகவும், தேர்தல் வாக்குறுதிகளை
வழங்கியும் இலகுவாக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களை சென்றடையும் வகையில்
தமது விளம்பர உத்திகளைக் கையாளுகின்றமை நவீன தொழில்நுட்பம் பற்றி பேசுகின்ற
அநேகரால் சிந்தித்து அறிய முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த பின்புலத்தில்
பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பில் த்த்தமது தேர்தல் பிரசார சுலோகங்களையும், காணொளி மூலமான பிரசாரங்களையும் பணம் செலுத்தி
விளம்பரங்களாக பதிவேற்றுவதன் மூலம் தேர்தல் தினம் வரையான காலப்பகுதியில் தாம்
பிரதிநித்துவம் வகிக்கும் மாவட்டத்தை இலக்காகக் கொண்டு விளம்பரங்கள் சஞ்சரிக்கும்
வண்ணம் நிபந்தனைகளை விடுக்கின்றனர்.
இதன்மூலம் அந்த
குறிப்பிட்ட வேட்பாளர்களின் விளம்பரங்கள் பேஸ்புக்கிலும், அதேநேரத்தில் இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி வலம்
வருவதால், அந்த சமூக ஊடகப் பரப்புகளில் சதா மூழ்கியிருக்கும்
வாக்காளர்களான இளைஞர்கள் மனங்களில் தங்களின் கட்சி
அல்லது சுயேச்சைக் குழு சின்னங்களையும், தத்தமது வேட்பாளர்
இலக்கங்களையும் பதியச் செய்யலாம் என்ற எதிர்ப்பார்ப்பு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கண்டி மாவட்டத்தை
எடுத்துக்கொண்டால். கடந்த
பாராளுமன்றத்தில் இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி லக்ஷ்மன் கிரியெல்ல,
ரவுப் ஹக்கீம், அப்துல் ஹலீம் ஆகிய அமைச்சரவை
அந்தஸ்துடைய சிரேஷ்ட அமைச்சர்கள், வேலுகுமார், லக்கி ஜயவர்தன, மயந்த திசாநாயக்க ஆகிய உறுப்பினர்கள்
இம்முறை புதிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
![]() |
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் |
இந்த பிரபல அரசியல்வாதிகள் புதிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) யானை சின்னத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள முன்னாள் நீதவான் பீ.பி. வராவெவ, கலாநிதி சரித் வேகொடபொல கிராகம, லாபிர் ஹாஜியார் மற்றும் முத்தலிப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜரட்ணத்தின் புதல்வரான ஜனார்த் ராஜரட்ணம் ஆகியோர் ஓரளவு சவாலாக இருக்கின்றனர்.
![]() |
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் |
மறுபுறத்தில் ஶ்ரீலங்கா
பொதுஜன பெரமுன சார்பாக முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான கெஹெலிய
ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த
அலுத்கமகே ஆகியோருடன், திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, முன்னாள் பிரதமர் டி.எம்.
ஜயரத்னவின் புதல்வரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன, வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி உதயன கிரிந்திகொட போன்ற
அரசியல்வாதிகளும் செல்வாக்கு பெற்றவர்களாகும்.
![]() |
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள். |
இவர்களின் தேர்தல் பிரசாரங்கள் வீடு வீடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் நிலையான தொலைபேசிகள் ஊடான பிரசார குரல் பதிவுகளையும், இணையத்தளத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அதிகளவு பணத்தை செலவிட்டு தொடர்ச்சியான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இத்தகைய பிரபலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு பின்புலத்தில் பிரபல வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்கள் மறைமுகமாக நிதி அனுசரணைகளை வழங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அவற்றை சரிவர நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் அல்லது சாட்சியங்களை கண்டுபிடிப்பது சவாலான விடயமாக உள்ளது.
இந்த விடயங்களைத் தவிர இம்முறை முதன் முறையாக சுயேச்சைக் குழு இலக்கம் 11 இல் வைரம் சின்னத்தில் போட்டியிடும் அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தனது பிரசாரங்களை பேஸ்புக் மூலம் மிகவும் நேர்த்தியாகவும், திட்டமிட்டும் முன்னெடுக்கும் ஒரு தன்மையை அவதானிக்க முடிகிறது.
![]() |
சுயேட்சைக் குழு - 11 கண்டி மாவட்ட வேட்பாளர் இஸ்திஹார் |
இந்த அனைத்துக்
கட்சிகளினதும் வேட்பாளர்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும்
அனுராத ஜயரத்னவே கண்டி மாவட்டத்தில் அதிகளவில் பேஸ்புக் ஊடான தனது தேர்தல்
விளம்பரங்களுக்காக செலவிடுகின்றார். இவர் கடந்த ஜலை 02 முதல் ஜூலை 31 வரையில் 2,499 (ரூபா 469,812) அமெரிக்க
டொலர் பணத்தை பேஸ்புக் விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளார்.
பேஸ்புக் தேர்தல்
விளம்பரங்களைக் கையாளும் கண்டி மாவட்ட அரசியல்வாதிகள் வரிசையில் இம்முறை
சுயேச்சைக் குழுவில் களமிறங்கியுள்ள இஸ்திஹார் இரண்டாவதாக திகழ்கின்றார். அவர்
கடந்த ஒரு மாதத்திற்குள் 2150 அமெரிக்க டொலர் (ரூபா 404,200) பணம் செலவிட்டுள்ளார்.
சுயேச்சைக் குழு
வேட்பாளர் ஒருவர் இந்தளவிற்கு பேஸ்புக் ஊடான தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு
பணத்தை செலவிடுகின்றமை ஆச்சரியமாகும்.
இவர்களைத் தவிர கெஹெலிய
ரம்புக்வெல்ல 1495 அமெரிக்க டொலரும் (ரூபா 4281,060),வேலுகுமார் 660 அமெரிக்க டொலரும் (ரூபா 124,080), மஹிந்தானந்த அலுத்கமகே 651 அமெரிக்க டொலரும்
(ரூபா 122,388) பேஸ்புக் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக
செலவு செய்துள்ளார்கள்.
FACEBOOK AD LIBRARY REPORT ஜூலை 02 முதல் ஜூலை 31 வரையான பேஸ்புக் விளம்பர செலவினம் - மத்திய மாகாணம். |
தேர்தல் சட்டத்தின் படி
வேட்பாளர்கள் தங்களின் சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலம் முழுவதும் இந்த விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பாராளுமன்றத்
தேர்தலின்போது சில அரசியல் வாதிகள் தாமாகவே முன்வந்து தங்களின் சொத்து விபரங்களை
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பகிரங்கப்படுத்தியிருந்தனர்.
எனினும், மகாத்மா அரசியல்வாதிகளாக தங்களை காட்டிக்கொண்ட பலர்
இதுவரை தங்களின் சொத்து விபரங்களை வெளியிடவில்லை
என்பது கவலைக்குரியதாகும்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவுசெய்யப்பட்டால், அவருக்கு கிடைக்கும் சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவுகள், சிறப்பு சலுகைகள் குறித்து வாக்காளர்களான பொது மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள்.
தகவல் மூலம் – FACEBOOK Ad Library Report
Link- https://www.facebook.com/ads/library/report/?source=archive-landing-page&country=LK
ஆனால் தாம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் என்னென்ன சிறப்பு சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துதான் இந்தளவிற்கு பணத்தை செலவிடுகின்றனரோ என்ற எண்ணம் மக்கள் மனதில் துளிர்விட வேண்டும் என்பதே அண்மைக்காலமாக பொது அமைப்புகள் மற்றும் கண்காணிப்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
ஒருவர் பாராளுமன்ற
உறுப்பினராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கிடைக்கின்ற நிதி மற்றும் ஏனைய
நன்மைகள்.
- கொடுப்பனவு உட்பட சம்பளம் - ரூபா. 58,785.00
- எரிபொருளுக்கான
கொடுப்பனவு - ரூபா. 30,000.00
- சபை அமர்வுகளில் பங்குபற்றலுக்காக - ரூபா. 97,605.00
- அலுவலக கொடுப்பனவு - ரூபா.100,000.00
- தொலைப்பேசி கொடுப்பனவு - ரூபா. 50,000.00
- பிரத்தியேக பணிக்குழு கொடுப்பனவு - ரூபா. 10,000.00
மொத்தம் - ரூபா. 346,390.00
இதுமட்டுமன்றி பாராளுமன்ற
உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க்க்கூடிய ஏனைய நிதி மற்றும் நன்மைகள்.
- இலவச முத்திரைக்கான செலவு - ரூபா 87,500.0
- தீர்வையற்ற வாகன அனுமதி (100% வீத தீர்வை சலுகை)
- காலை மற்றும் மதிய உணவு (பாராளுமன்ற உணவகத்தில்)
- மேல் மாகாணத்தில் வதிவிடத்தைக் கொண்டிராத உறுப்பினர்களுக்கு விடுதி வசதி.
- இராஜதந்திர கடவுச்சீட்டு.
- ஓய்வூதியம்.
எனவே மக்கள் வாக்குகளால்
பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு இந்தளவிற்கு ஆர்வம் காட்டும் நபர்கள் தங்களின்
உண்மையான தேவைகளையும், அபிவிருத்திகளையும்
பெற்றுத் தரக்கூடியவர்களா என்றும், அவர்களின் பின்புலம்
மற்றும் மக்களின் வரியிலிருந்து சம்பளம் பெறப்போகின்ற மக்கள் சேவர்கள் யார்
என்பதையும் நன்கறிந்து தகுதிவாய்ந்தவர்களுக்கு சிந்தித்து வாக்களிப்பதற்கு மக்கள்
முன்வரவேண்டும் என்று வலுவான கோரிக்கைகள்
விடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ஒவ்வொரு கட்சிகள் சார்பாகவும் 2020 பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு தேர்தல் பிரசார செலவுகளுக்காக ஜூலை மாதம் 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான
காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செலவு விபரங்களை உத்தேச தொகையாக தேர்தல்
வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வௌியிட்டுள்ளது.
அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், பேஸ்புக் உட்பட சமூக ஊடகம், வேறு செலவுகள் என
வகைப்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார செலவுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய ஶ்ரீலங்கா
பொதுஜன பெரமுன (SLPP) குறிப்பிட்ட இரண்டு வாரங்களில் 151 மில்லியன்
ரூபாவும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 185 மில்லியன் ரூபாவும், ஐக்கிய தேசிய கட்சி (UNP)
123 மில்லியன் ரூபாவும் செலவு செய்துள்ளதுடன், புதிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தேர்தல்
பிரசார செலவுகளுக்காக அதிக தொகையை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய கட்சிகளான தேசிய
மக்கள் சக்தி (NPP) 36 மில்லியன் ரூபாவும், எங்கள் மக்கள் சக்தி கட்சி
(OPPP) 13 மில்லியன் ரூபாவும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP) 5 மில்லியன்
ரூபாவும், இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 1 மில்லியன் ரூபாவும் இம்முறை தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிட்டுள்ளன.
இந்த செலவுகளுக்கு அமைவாக
இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு ஜூலை
மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் குறிப்பிடப்பட்ட ஏழு கட்சிகளும் மொத்தமாக 514 மில்லியன் ரூபாவை தங்களின் ஊடக தேர்தல் பிரசாரங்களின் பொருட்டு
செலவிட்டுள்ளன. எனவே தேர்தலுக்கு முன்னரான கடைசி இரண்டு வாரங்களில் இந்த செலவினம்
இரட்டிப்பாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கட்சிகளின் அடிப்படையில் தேர்தல் விளம்பரங்களுக்கான உத்தேச செலவின மதிப்பீடு.
தகவல் மூலம் - https://cmev.org/#jp-carousel-3959
No comments