உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இ.தொ.கா பதவிக்கு சோரம் போகக்கூடாது - புத்திஜீவிகள் வலியுறுத்தல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆசனத்தை அரசுக்கு தாரைவார்த்து விடுமா என்று கண்டி மாவட்ட புத்திஜீவிகள் சந்தேகத்துடன் கேள்வியெழுப்புகின்றனர்.

அவ்வாறு இடம்பெறுமாயின், கண்டி மாவட்டத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சேவைகள் பலமிழற்து போய்விடும் என்பதுடன், மக்களும் அநாதரவாகி விடுவார்கள் என புத்திஜீவிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.


கண்டி மாவட்டத்தில் இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தல்களின் போதெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெறுவது கடிமாகக் காணப்பட்ட போதிலும், கடந்த இரண்டு முன்று பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பைசல் முஸ்தபா இ.தொ.கா. சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவாகினார்.


அதன் பின்னர் அவர் கட்சி மாறிவிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு முஸ்லிம் மக்களது வாக்குகளும் கிடைக்கப் பெற்றிருந்தது.


இவ்வாறான நிலைமையின் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின்போது கண்டி மாவட்டத்தில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறவில்லை.


எனவேதான் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தூரநோக்கு சிந்தனையுடன் பரத் அருள்சாமி என்ற இளைஞரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக நிறுத்திவிட்டு இ,தொ.கா.வின் சிரேஷ்ட உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான முன்னாள் மத்திய மாகாண சபைத தலைவராக செயற்பட்ட துரை மதியுகராஜாவை தேசியப் பட்டியலில் முதன்மையாளராக நிறுத்தினார்.


ஆனால் தற்போது 2020 பொதுத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பரத் அருள்சாமி தோல்வியடைந்து விட்டார். இந்த நிலைமையின் கீழ், தேசியப் பட்டியல் மூலம் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது.


ஏற்கனவே வேட்புமனு தாக்கலின்போதே முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் துரை மதியுகராஜாவை கண்டி மாவட்டத்திற்கும், மற்றுமொருவரை நுவரெலியா மாவட்டத்திற்கும் தேசியப் பட்டியல் மூலம் நியமிப்பதற்கு தூரநோக்குடன் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், அவரது மறையின் பின்னர், அந்த இடத்திற்கு அவரது மகனான ஜீவன் தொண்டமான் களமிறங்கினார். நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதுபாண்டி ரமேஷ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.


இதனையடுத்து இ.தொ.கா.விற்கு தேசிய பட்டியல்மூலமும் ஒரு ஆசனம் கிடைக்கவேண்டியுள்ளது. ஆனால் இ.தொ.கா. தேசிய பட்டியல் ஆசனத்தை தாரைவார்த்துவிட்டு வெற்றிபெற்றுள்ள இருவருக்கும் அமைச்சர் பதவியோ அல்லது இராஜாங்க அல்லது பிரதியமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.


ஆனால் முன்னாள் அமைச்சர்களான காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இன்று இருந்திருப்பார்களானால் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்துடன் சாணக்கியத்துடன் பேரம் பேசும் சக்தியினால் கண்டி மாவட்டத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கும் சேவைகள் கிட்டுவதற்கான வழியை ஏற்படுத்தியிருப்பார் என்று கண்டி மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக அமைப்புகள் என பலதரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments