September 29, 2022

 பிசிஆர் பரிசோதனைக்கு பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டனரா அட்டுலுகம மக்கள்?

ஏடிஎம் இயந்திரம் வருவதாக கூறிய பின்னர் மக்கள் பணம் எடுக்கச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களை பலவந்தமாக பிடித்து பிசிஆர் பரிசோதனை செய்ததால் மக்கள் பயந்துவிட்டனர். அதனால்தான் அவர்கள் ஆரம்பத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லைஎன அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான பர்ஹான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குறிப்பிட்டார்.

அட்டுலுகமை

Source – Atulugama Youth Organization

களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதோடு, இவர்களின் பிரதான தொழிலாக வியாபாரம் காணப்படுகின்றது. வாசனை திரவியங்களை சேகரிப்பது இந்த பிரதேசத்தின்80 சதவீதமான மக்களின் வாழ்வாதாரமாக காணப்படுகின்றது.  குறிப்பாக மத்துகம, இரத்தினபுரி போன்ற இடங்களுக்குச் சென்று இவற்றை சேகரித்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்குவார்கள்.

திஹாரிய

Source-Thihariya Former GS   

சனநெரிசல் கொண்ட பகுதியாக திஹாரி காணப்படுவதோடு, மக்கள் மிகவும் நெருங்கி வாழும் சூழல் அமைப்பே அங்கு காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் தொழிலுக்காக கொழும்பு மேனிங் சந்தை, பேலியகொடை மீன் விற்பனை நிலையம் மற்றும் பேலியகொடை பொருளாதார மையம் ஆகியவற்றிற்கு தினமும் பயணிக்கின்றனர்.

பிசிஆர் பரிசோதனையிலிருந்து பின்வாங்கியமைக்கான காரணங்களாக மக்கள் அட்டுலுகம மற்றும் திஹாரிய மக்கள் கூறியமை

 • நோய்த்தொற்றை காரணம் காட்டி பாகுபாடு காட்டியமை
 • தொற்றாளர்கள் உடனடியாக அழைத்துச் செல்லப்படவில்லை.
 • பலவந்தமாக பரிசோதனை நடத்தப்பட்டதால் பயம்
 • ஜனாசா எரிப்பு
 • தூர இடங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச்செல்லல்
 • பிசிஆர் பரிசோதனை தொடர்பாக மக்களை ஊடகங்கள் தவறாக வழிநடத்தியதால் ஏற்பட்ட அச்சம்

 

அட்டுலுகமவைச் சேர்ந்த பர்ஹானிடம் நாம் தொடர்ந்து பேசியபோது, ‘இப்போது சுமார் 50 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். மொத்தமாக இங்கு 17,000 குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு300 அல்லது 350க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் உள்ளன. எமது ஊரைச் சுற்றியுள்ள பாணந்துறை, பண்டாரகம களுத்துறை மற்றும் மொறரட்டுவ போன்ற இடங்களிலும் அழகுசாதன கடைகள், துணிக்கடைகள் போன்றவற்றை எமது மக்கள் வைத்துள்ளனர்.  அட்டுலுகம மக்கள் கொவிட் நோயாளிகள் என முத்திரை குத்தி அவர்களுக்கு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படியாயின் இந்த நோயை காரணம் காட்டி எம்மை ஓரங்கட்டும் ஒரு நடவடிக்கையாக இது இடம்பெறுகின்றதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஒருவருடைய கால் வெட்டுப்பட்டு அவர் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் அட்டுலுகம என்ற காரணத்தினால் யாரும் அவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

ஆரம்பத்தில் 300, 400 பரிசோதனைகள் இடம்பெற்றன. அதில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை அழைத்துச்செல்ல உடனே வரவில்லை. குறிப்பாக, ஒருவரை அழைத்துச்செல்ல 10 நாட்களுக்கு பின்னரே வந்தனர். அதுவரை அவர் கிராமத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று நோய் பரவியிருக்கும். இவ்வாறான பாகுபாடான விடயங்கள் எமது பகுதியில் இடம்பெற்றது. 500 பேருக்கு பரிசோதனை நடத்தினால் அதில் சுமார் 180 பேருக்கு தொற்றுறுதியாகின்றது. அவர்களை7 தொடக்கம்10 நாட்களுக்கு ஊரிலேயே வைத்துவிடுகின்றனர். எமது பிரதேசத்தில் கல்வியறிவு குறைந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாடின்றி ஊரில் சுற்றித்திரிகின்றனர். நோயின் பாரதூரம் அவர்களுக்கு விளங்குவதில்லை. பொலிஸார் ஊர் எல்லையிலேயே உள்ளனர். 10 நாட்களின் பின்னர் அழைத்துச்சென்று5, 6 நாட்களுக்கு வைத்துவிட்டு அனுப்பிவிடுகின்றனர்.

ஊரை முடக்கிய இரண்டு தினங்களுக்கு பின்னர் ஏடிஎம் இயந்திரம் வருவதாக கூறிய பின்னர் மக்கள் பணம் எடுக்கச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களை பலவந்தமாக பிடித்து பிசிஆர் பரிசோதனை செய்ததால் மக்கள் பயந்துவிட்டனர். இங்கு ஒரு வழமை உள்ளது. ஊர் மூலமாக அல்லது பள்ளிவாசல் மூலமாக ஒரு விடயத்தை எடுத்துக்கூறினால் மக்கள் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இவர்களை பயங்கரவாதிகளை போல பிடித்துச்சென்றதால் பயந்துவிட்டார்கள். ஆகவே ஆரம்பத்தில் பின்வாங்கினார்கள். நிலைமையை எடுத்துக்கூறிய பின்னர் மக்கள் பரிசோதனைக்காக சாரை சாரையாக வந்தனர்.

 

பின்னர் நாமாகவே திட்டமிட்டு இங்குள்ள மக்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். அதற்காக ஒரு குழுவை அமைத்து தேவையான விடயங்களை செய்து கொடுத்தோம்.  

உண்மையில் எமது பிரதேசம் கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலக்குவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இவ்வாறான விடயங்களை செய்கின்றனர்என்றார்.

பர்ஹான் அடுக்கடுக்காக முன்வைத்த இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, பொதுச் சுகாதார வைத்திய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவை தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

நாம் யாரையும் பிடித்து பலவந்தமாக பிசிஆர் செய்யவில்லை. கொவிட் தொற்றின் பின்னர் அதன் ஆபத்து தொடர்பாக பகுப்பாய்வு செய்கின்றோம். அதில் ஆபத்து நிறைந்த இடங்களில் உள்ள மக்களை பிசிஆர் பரிசோதனைக்கு வருமாறு அழைக்கின்றோம். ஆனால் அவர்கள்; பரிசோதனைக்கு வருவதில்லை என்ற பிரச்சினையே எமக்குள்ளது.

தொடர்பு தடமறிதலை பயன்படுத்தி அவர் தொற்றாளருடன் இருந்தாரா, எவ்வளவு நேரம் இருந்தார், எத்தனை பேர் இருந்தனர், முகக்கவசம் அணிந்திருந்தனரா என சகல விடயங்களையும் பகுப்பாய்வு செய்கின்றோம். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு ஒத்துழைப்பது குறைவு.

தொற்றுறுதியானவர்களை அழைத்துச்சென்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்க வேண்டும் என்பது எமது நாட்டின் தனிமைப்படுத்தல் சட்ட நடைமுறையாகும். இப்போது அம்மக்கள் தமது கிராமத்திற்குள்ளேயே இருப்பதாக கூறுகின்றனர். அட்டுலுகம பிரதேசத்திற்கு மாத்திரம் அவ்வாறு தனியான சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

அட்டுலுகம மாத்திரமல்ல, முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பல பகுதிகளில் இப்பிரச்சினை உண்டு. பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, திஹாரிய, காத்தான்குடி ஆகிய பகுதிகளிலும் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லைஎன்றார்.

ஆரம்பத்தில் பிசிஆர் பரிசோதனைக்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்மயில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவ்வாறு கூறுகின்றார்.

கொரோனா பரிசோதனையை ஆரம்பத்தில் தவிர்த்தமை உண்மைதான். அதற்கு காரணம், தொற்றுறுதியான ஒருவரை தனிமைப்படுத்தாமல் அவர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் சொல்லாமல் விடுகின்றனர். இது அர்த்தமற்றதென கருதியே ஆரம்பத்தில் ஒத்துழைக்கவில்லை. லொக்டவுண் என கூறினாலும், எமது ஊருக்குள் மக்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். காரணம் பொலிஸார் எல்லையில் உள்ளனர். இதுவரை சுமார் 12,13 தடவைகள் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

எமது ஊரில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், ஒருசிலர் இதனை குழப்பி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எமது நாட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் எமது சிறுபான்மை மக்களே பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக எமது பிரதேசத்தில் படிப்பறிவுள்ளோர் குறைவு, அரச துறைகளில் முடிவெடுக்கும் பகுதியில் எமது மக்கள் இல்லை. அதன் காரணமாக எமது மக்கள் சார்பாக பேசுவதற்கான அதிகாரிகள் குறைவாக உள்ளனர். இப்பிரச்சினை இந்தளவு தூரத்திற்குச் செல்ல இதுதான் காரணம்என்றார்.

பொதுச் சுகாதார வைத்திய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இதுதொடர்பாக கேட்டபோது,

தொற்றுறுதி உள்ளது என அறிவிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்குள் இருக்கவேண்டியது நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை. அவர் கிராமத்திற்குள் நடமாடி நோயை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் யாரையும்8, 10 நாட்களை காத்திருக்க வைக்கவில்லை. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள படுக்கை வசதி, போக்குவரத்து என்பவற்றை நாம் ஆராய வேண்டும். காரணம், இப்போது தினமும் சுமார் 500 பேருக்கு தொற்று உறுதியாகின்றது. ஆனால், அதிகபட்சம்2 நாட்களுக்குள் நாம் அழைத்துச்சென்றுவிடுவோம். அதற்குள் அவர்கள் வீட்டிற்குள் இருப்பது அவசியம். நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதனை ஒரு பிரதேச மக்களுக்கு மாத்திரம் நாம் தனியாக செயற்படுத்துவதில்லை. அனைவரையும் சமமாகவே கையாள்கின்றோம். உண்மையில் இது இந்த மக்களின் பிரச்சினை இல்லை. இவர்கள் மத்தியில் சில கடும்போக்குவாத அமைப்;புகள் உள்ளன. அவர்களின் சிந்தனைதான் இம்மக்கள் மூலம் வெளிப்படுகின்றதுஎன்றார்.

மக்கள் இந்த நோய்பற்றிய அறிவுறுத்தல்களை சரியாக தெரிந்து பின்பற்றுவது மிக அவசியம். சுய தனிமைப்படுத்தல் என்பது கட்டாயப்படும்போது அதை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த பெருநோய் அவலத்தில் மக்களின் பங்கும் மிகப்பெரியது. அறிகுறிகள் இல்லாவிட்டாலும் கூட நோய் இருப்பது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டால்  பொலிஸ் காவல் இன்றி தாமாகவே தனிமைப்பட்டு இருக்கவேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். இதுபற்றி அட்டுலுகம இளைஞர் சங்கத்தின் உறுப்பினர் எம்.எச்.எம். பாயிக் இவ்வாறு கூறுகிறார். ‘மக்களை குற்றஞ்சாட்டும் ஊடகங்கள் அவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடுவதில்லை. வெளியில் சென்று வேலைசெய்த4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 18ஆம் திகதி பிசிஆர்க்கு வரவழைத்தனர். நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படால் தம்மை தனிமைப்படுத்துவதற்கான தூர இடங்களுக்கு கூட்டிச்சென்றுவிடுவார்கள். 14 நாட்கள் அங்கு இருக்கவேண்டும். குடும்பம், பொருளாதாரம் பற்றிய பிரச்சினைகளுடன், மக்கள் மத்தியில் பயமும் காணப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் மக்கள் தயக்கம் காட்டினர். அப்போது மூடியிருந்த கடைகளை திறக்கவைத்து தூங்குகின்றவர்களை எழுப்பி பலவந்தமாக பரிசோதித்தனர். அது இன்னும் பயத்தை அதிகரித்துவிட்டது. இந்த விடயங்கள் பற்றி எதுவும் இல்லாமல் மக்கள் பரிசோதனைக்கு போகவில்லை, எதிர்க்கிறார்கள் என பெரும்பான்மை ஊடகங்களில் வெளிவந்தது. இந்தப் பக்கத்தை யாரும் அறிக்கையிடவில்லை.’ என்பது எம்.எச்.எம். பாயிக்கின் ஆதங்கமாக இருக்கிறது.

இந்த இடத்தில் அரசினதும் ஊடகங்களினதும் பொறுப்பு பற்றியும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நோய் பற்றிய விடயங்கள் பரவலாக அதிகளவில் வெளிவந்தும் கூட உத்தியோக பூர்வமாக நோய் பற்றிய விடயங்கள் பரவலாக்கப்படவி;ல்லை. அத்துடன் பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் அளவுக்கு இலகுபடுத்தப்ட்ட ஊடக அறிக்கைகள் குறிப்பாக இலத்திரனியல் ஊடக அறிக்கைகள் கவனத்தை ஈர்க்கத்தவறிவிட்டன. உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களினூடாக மக்களிடம் பரவலடைய செய்திருக்கவேண்டும். இவை இல்லாததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அட்டுலுகம மக்கள் மட்டுமல்ல ஏனைய பல இடங்களிலும் உள்ள மக்களின் நிலையும் இதுதான். இந்த இடத்தில் இன்னொரு பிரச்சினையும் உருவாகியிருந்தது. ‘நோயாளி என இனங்காணப்பட்ட ஒருவர் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பியமைஇதுபற்றி கேட்டபோது,

சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பியதாக கூறினார்கள். அவர் மதுபோதையில் இருந்தமை உண்மை. அவ்வாறு எச்சில் துப்பியிருந்தால் அது தவறான விடயம். அந்த தவறை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதன் அடுத்த பக்கத்தையும் குறிப்பிட வேண்டும். அவருக்கு பொசிடிவ் என கூறி அவரை தனிமைப்படுத்த கூட்டிச்செல்வோம் என்றனர். 12 நாட்களாக யாரும் வரவில்லை. அவர் உடைகளை தயார்செய்து 12 நாட்கள் காத்திருந்தார். பொசிடிவ் ஆனவர்களை உடன் அழைத்துச்செல்லாமல் விடுவது எம்மீதான பாரபட்சமாகவே இருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது. அத்துடன் ஜனாசா எரிப்பு தொடர்பாக மக்கள் மனக்கவலையில் உள்ளனர். இதற்கும் அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை. இவையெல்லாம்தான்மக்களை பெரும்பீதி கொள்ள வைத்தவை. இவை சரியான முறைகளில் கையாளப்பட்டிருந்தால் மக்கள் முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பார்கள் என எண்ணுகிறேன்.’ என்கிறார் எம்.எச்.எம். பாயிக்.

இவர்களின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்க பொறுப்புவாய்ந்தவர்களின் பதில்களை நாடினோம்.

பொதுச் சுகாதார வைத்திய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறிய பதில் என்ன?

உண்மையில் நம்பிக்கையற்ற ஒரு நிலையே இம்மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே, இதன் உண்மைத்தன்மை தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்துவதும் அவசியம். அத்தோடு, எம்மால் முடிந்தளவு நாம் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் படித்த இளைஞர்கள் சிலர் இதற்கு ஒத்துழைப்பதாகவும் பள்ளியில் அவர்களுடைய சமய தலைவர்களுடன் இணைந்து இதனை முன்னெடுப்பது தொடர்பாகவும் கதைத்தார்கள். மதத் தலைவர்கள் கூறுவதை அம்மக்கள் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டனர். எமது நோக்கம் நோயை கட்டுப்படுத்துவதாகும். ஆகவே நாமும் அவ்வாறு செய்தோம். ஆனால்;, மதத் தலைவர்கள் கூறுவதையும் அவர்கள் ஏற்கவில்லை. 500 பேரை பிசிஆர் பரிசோதனைக்கு அழைத்தால்100 பேர்தான் வருகின்றனர். அட்டுலுகமயில் இன்னும் அந்த நிலை தொடர்கின்றதுஎன்றார்.

அட்டுலுகம பிசிஆர் நிலவரம் தொடர்பாக பண்டாரகம சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையை தொடர்புகொண்டு கேட்டபோது, ஒக்டோபர் முதலாவது வாரம் தொடக்கம் ஜனவரி முதலாவது வாரம் வரை 4076 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில்1020 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

 

 Source – Bandaragama MOH

அப்பிரதேச மக்களின் நிவாரண விடயங்கள் தொடர்பாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இப்பிரதேசம் தொடர்;ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இம்மக்களுக்கு சிரமமாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இவர்களுடைய நிலை மோசமாகும் என்பதால் இப்போது தாமாகவே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். எம்மிடம் கதைக்கும்போது கொரோனா என்ற விடயம் இல்லையென கூறினார்கள். சிறிய ஒரு விடயத்திற்கும் அனைவரும் ஒன்றுகூடுகின்றனர். அது நல்ல விடயம்தான். ஆனால், கொரோனா காலத்தில் அப்படி ஒன்றிணைய முடியாது. நோயின் தாக்கத்தை உணர்ந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது. அதே சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது அவசியம்என்றார்.

அட்டுலுகமவில் 2020 நவம்பர்21ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் செயற்பாடு இரண்டு மாதங்களுக்கு பின்னர் இம்மாதம்21ஆம் திகதி இரண்டு கிராம சேவகர் பிரிவுகளிலும் நேற்று(27.01.2021) 9 கிராம சேவகர் பிரிவுகளிலும் நீக்கப்பட்டது.

திஹாரிய மக்களும் பிசிஆர் பரிசோதனைகளை நிராகரித்தார்களா? ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரிடம் இதுபற்றி வினவினோம். ‘பி.சி.ஆர். பரிசோதனை தொடர்பாக ஆரம்பத்தில் இங்குள்ள மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட காரணத்தால், இம்மக்களுக்கு அச்ச நிலை தோன்றியது. இதனால் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டினர். எனினும் பள்ளிவாசல்களில் நிர்வாக சபை அங்கத்தவர்கள், கொவிட் ஒழிப்பு குழுவினர், அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் மக்களை வழிநடத்தியதன் பின்னர் மக்கள் முன்வந்து பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். எனினும், சில இனவாத ஊடகங்களும் சமூக ஊடகங்களும் எமது சமூகத்தை பற்றி தவறான விடயங்களை பரப்பும் செயலில் ஈடுபட்டன. திஹாரியில் மூவின சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸாரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அரசாங்கத்தின் உதவி கிடைப்பதற்கு முன்னர் இங்குள்ள சிங்கள இளைஞர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மக்களுக்கு உணவுப்பொருட்கள் போன்றவற்றை வழங்கினர். அதேபோன்று முஸ்லிம் இளைஞர்களும் பாகுபாடின்றி உதவிகளை செய்தனர். இவ்வாறு ஒற்றுமையாக வாழும் எம்மை குழப்பும் செயற்பாட்டில் சிலர் திட்டமிட்டு இவ்வாறான செய்திகளை பரப்புகின்றனர்என அவர் குறிப்பிட்டார்.

எனினும், இக்குற்றச்சாட்டை பொதுச் சுகாதார வைத்திய சங்கத்தின் தலைவர் மறுத்தார்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு இங்கில்லை. இலங்கை ரூபாவில் ஒரு பிசிஆர் பிரிசோதனைக்கு 6000 ரூபாய் செலவாகின்றது. ஆகவே அவசியமான மக்களுக்கு மாத்திரமே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதற்காகத்தான் நாம் ஆய்வை முன்னெடுக்கின்றோம்.

பிசிஆர் பரிசோதனைக்கு தெரிவுசெய்யும் முறை

 • கொரோனா தொற்றுள்ளவருடன் பழகிய காலம் எவ்வளவு?
 • தொற்றுள்ளவர் முகக்கவசம் அணிந்திருந்தாரா? அவருடன் பழகியவர் முகக்கவசம் அணிந்திருந்தாரா?
 • அவர்கள் பேணிய இடைவெளி என்ன?

இவ்வாறு ஆராய்ந்து செய்யப்படும் பரிசோதனையில் அவர்கள் சிங்களவரா, தமிழரா, முஸ்லிமா என நாம் பார்ப்பதில்லை. அவர்கள் ஒத்துழைக்காத காரணத்தினால்தான் அண்மையில் திஹாரியில் பிசிஆர் பரிசோதனை செய்தபோது நிட்டம்புவ பொலிஸாரும் சென்றிருந்தனர். இம்மக்களை தெரிவுசெய்து பிசிஆர் செய்கின்றோம் என்பது இம்மக்களிடம் காணப்படும் மிகவும் தவறான கருத்து. இம்மக்களின் வீடுகள் அருகருகே காணப்படுவதோடு, மக்கள் நெருங்கி வாழ்கின்றனர். இம்மக்கள் மத்தியில் அதிகளவில் தொற்று ஏற்பட இதுவே காரணமாக அமைகின்றது. அதனை புரிந்துகொள்ளாமல் இம்மக்கள் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். அதனை கட்டுப்படுத்துவதே இப்போது பெரிய பிரச்சினையாக உள்ளது.

அட்டுலுகமவில் கடந்த டிசம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் பிசிஆர் செய்யவில்லை. ஜனவரியில் மீண்டும் தொடங்கினோம். ஒப்பீட்டளவில் இப்போது தொற்றுறுதி ஓரளவு குறைந்துள்ளது.

அவர்கள் இறந்த பின்னர் உடல்களை எரிப்பது அதற்கு காரணமாக கூறுகின்றனர். பிசிஆர் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்றும் போலியானது என்றும் அவர்கள் மத்தியில் ஒரு கருத்து காணப்படுகின்றது. அடுத்ததாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள வசதி குறைவாக உள்ளதென கூறுகின்றனர்.

நோயை கண்டறிய பிசிஆர் பரிசோதனையே உள்ளது. அவர்கள் அதற்கு ஒத்துழைக்காவிட்டால் நோய் பரவலை தடுக்கவும் முடியாது, உண்மையான நிலையை கண்டறியவும் முடியாதுஎன உபுல் ரோஹண திட்டவட்டமாக குறிப்பிடுகின்றார்.

 Source-Thihariya Covid Prevention Committee

மேற்குறித்த அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு இதுவரை72 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது, அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தரவாகும். இங்குள்ளவர்களில் சிலர் வைத்தியசாலைக்குச் சென்று மற்றும் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் சிலர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, அவர்களையும் இணைத்தால் இதன் மொத்த எண்ணிக்கை115 ஆகும்.

ஜனாசாக்களை ஈவிரக்கமின்றி எரித்து சாம்பலாக்குகின்றனர். மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் செயற்படுகின்றமை, எம்மக்களை மனதளவில் அதிகளவில் பாதித்துள்ளது. தாம் இறந்தாலும் இவ்வாறே தீயில் எரிக்கப்படுவோம் என்ற பயம் எம்மக்கள் மத்தியில் இன்றும் உள்ளதுஎன திஹாரியைச் சேர்ந்த அக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குறிப்பிட்டார்.

ஜனாசா எரிப்பு மற்றும் பயம் காரணமாக பிசிஆர் பரிசோதனையில் மக்கள் ஆர்வம் காட்டாத காரணத்தால் திஹாரியில் கொவிட் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவொன்று அமைக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இக்குழுவின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டதாக அக்குழுவின் பிரதித் தலைவர் அஸ்மி சராஃப் எம்மிடம் தெரிவித்தார். பிசிஆர் பரிசோதனையை தொடர்ச்சியாக நிராகரித்தால் முஸ்லிம் சமூகத்தின் பெயருக்கு இழுக்கு என்பதோடு, பல பாதிப்புகள் ஏற்படும். இதனை கருத்திற்கொண்டு பிசிஆர் பரிசோதனையை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக இக்;குழு அமைக்கப்பட்டதாக அஸ்மி சராஃப் கூறினார். அரசாங்கத்தின் நிவாரணப் பணிகள் தமது பிரதேசத்திற்கு வருவதற்கு முன்பாக இக்குழுவின் மூலம் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொதிகள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுத்தாகவும் அஸ்மி குறிப்பிட்டார்.

திஹாரிய கொவிட் விழிப்புணர்வு குழுவின் பணிகள்

 • கொவிட் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல்
 • விழிப்புணர்வு கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்
 • கொவிட் தடுப்பு தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
 • வியபார ஸ்தாபனங்களுக்கு தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்குதல்
 • கிருமிநாசினி தெளித்தல்
 • நிவாரண பொதிகள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுத்தல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்கலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. இறந்த உடல்களில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும்,  அது பரவுவதற்கு வாய்ப்பில்லையென இலங்கை மருத்துவ சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதன் பிரகாரம் இறந்த உடல்களை புதைக்கலாம் என கடந்த டிசம்பர் 31இல் நடைபெற்ற விசேட நிபுணர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை எரிக்க வேண்டும் என்பதே அரசாங்கம் நியமித்த நிபுணர் குழுவின் பரிந்துரையாக அமைவதாகவும் அதனையே அரசாங்கம் பின்பற்றுவதாகவும் கடந்த 7ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் குறிப்பிட்டார்.

இந்த விடயமும் முஸ்லிம் மக்கள் பிசிஆர் பரிசோதனைக்கு தயக்கம் காட்டியமைக்கான காரணமாக அமைகின்றதென அட்டுலுகம மட்டும் திஹாரிய மக்கள் குறிப்பிட்டனர்.

அரசாங்கம் வழங்கிய உதவிகள் நிவாரணங்கள் கிடைத்ததா என்பதை கேட்டோம். இரண்டு தடவைகள் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும்5000 ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் அட்டுலுகம மக்கள் குறிப்பிட்டனர். அத்தோடு, ஊரிலுள்ள வர்த்தகர்களின் உதவியுடன் அனைவருக்கும் பொருட்கள் மற்றும் குடும்பமொன்றிற்கு2000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். 

தற்போதைய கொரோனா முடக்கத்தால் கோடிக்கணக்கான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அட்டுலுகம பர்ஹான் குறிப்பிட்டார். 2 மாத முடக்கல்நிலையில் 500 கோடி ரூபாய் பெறுமதியான வறுமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தாம் கணிப்பொன்றை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது, இங்கு அச்சம் மற்றும் தமது உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை போன்ற விடயங்களே பிசிஆர் பரிசோதனைக்கு பின்வாங்க காரணமாக உள்ளன. பிசிஆர் பரிசோதனை தொடர்பாக ஊடகங்கள் போதிய விழிப்புணர்வு வழங்குவதோடு, அம்மக்களை ஓரங்கட்டும் வகையில் இனவாத கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்ப்பது அவசியம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நோயாளிகளே தவிர குற்றவாளிகள் அல்லர். அவர்களை ஓரவஞ்சனையுடனும் குற்றவாளிகளாகவும் நடத்துவதானது தமது நோயை மறைக்கவும் பிசிஆர் பரிசோதனைக்கு பின்வாங்கவும் வழிசமைக்கலாம். இது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமையும். வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வறுமை நிலையை நோக்கிச் செல்லும் அபாயமும் ஏற்படும்.

மறுபக்கத்தில் இந்நோயை காவும் காவிகளாக மக்கள் ஒருபோது அமைந்துவிடக்கூடாது. தமக்கு தொற்றுறுதி ஆன பின்னர் வெளியில் அலைந்து திரியாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது ஒவ்வொரு பிரஜைகளினதும் கடமை. தமது உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் சில ஊடகங்கள் தம்மை பாரபட்சமாக நடத்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர். மார்க்க கடமைகள் எந்தளவு முக்கியமானதோ அந்தளவு பொறுப்புவாய்ந்த பிரஜையாக ஒவ்வொருவரும் நடந்துகொள்வதும் அவசியம். அத்தோடு, எச்சில் உமிழ்தல் போன்ற வக்கிர செயற்பாடுகளில் ஈடுபடுவது நிலைமையை ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை உணரவேண்டும். 13 மரணங்களுடன் கொரோனாவின் முதலாவது அலை ஓய்ந்தபோதும், இப்போது270 தாண்டி இறப்புக்கள் செல்கின்ற போது அதன் பாரதூரத்தை அறிந்துகொள்வது அவசியம்.

– கலாவர்ஷ்னி கனகரட்ணம்

 

Leave a Reply

Your email address will not be published.