கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 55 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கண்டி மஹியாவை பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (30-01-2021) காலை 8.30 அளவில் ஆரம்பமானதுடன், சுமார் ஒரு மணித்தியாலமாக நீடித்தது. இதில் கலந்துகொண்டவர்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்து ஒரு மீற்றர் இடைவௌியைப் பேணி ஆர்ப்பாடடத்தை முன்னெடுத்திருந்தனர்
இதன்போது மஹியாவை பிரதேச மக்கள் மற்றும் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ மாணவிகள் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் பங்குபற்றியிருந்தனர்.
மஹியாவை பிரதேசம் கடந்த 55 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 84 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மஹியாவை பிரதேசம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், உரிய காரணங்கள் எதுவுமின்றி தமது பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படாமைக்கு என்ன காரணம் என்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
மேலும், கண்டி மாநகரை அண்மித்துள்ள பகுதிகளில் தினக் கூலிகளாகவும், தனியார் நிறுவனங்களில் சிற்றூழியர்களாகவும் தொழில்புரியும் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித வருமான மார்க்கமுமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், தமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஊடாக சிறந்த தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கவனயீர்ப்பில் கலந்துகொண்ட மக்கள் கேட்டுக்கொண்டனர்.
மஹியாவை பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவையாளரும், ஆசிரியருமான வெ. சிவப்பிரகாஷ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை தெரிவித்ததுடன், ஜனாதிபதி மூலம் தமது மக்களுக்கு சிறந்த தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
[காணொளி]

