அரசாங்கத்தின் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் இன்று (22) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணிக்கு பல்வேறு சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்கியதுடன், பெரும் எண்ணிக்கையான பொது மக்களும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
கண்டி – பேராதனை பழைய வீதியூடாக கண்டி மணிக்கூட்டுக் கோபுர சந்தி நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், அதில் கலந்துகொண்டிருந்தவர்கள் கொத்தலாவல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு சென்றனர்.
‘இலவசக் கல்வியை சீரழிக்கும் வகையில் உயர்கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு துணைபுரியும் கொத்தலாவல சட்டத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி இ்நத பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பேரணியின் இறுதியில் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்த, வத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் நிக்கவெவ பஞ்ஞாசேகர தேரர் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Kandy Tamil News)

