December 10, 2022

உலகில் பல்வேறுபட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினங்களிலும் பால்நிலை வேறுபாடுகள் உள்ளன. அவை மனித பிறவியும் இல்லாமல் இல்லை. மனிதப் படைப்பில் ஆண் பெண் என்ற இரு வேறு விதமான பால்நிலை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே இப்பால்நிலை வேறுபாடானது இன்று நேற்றுப் பிறந்த ஒன்றல்ல. அவை மனித பிறவியின் ஆரம்பம் முதலே தோன்றி வளர்ந்த ஒன்றாகும். ஆதி காலத்தில் ஆண்கள் மட்டுமே வேட்டைக்குச் செல்ல வேண்டும் பெண்கள் சமைக்கவும், இனத்தைப் பெருக்கவும் மட்டுமே என ஒதுக்கி விட்டனர்.

அன்று ஆரம்பித்த பால்நிலை வேறுபாடு. அது இன்று வரையிலும் வேரூன்றி நிற்கின்றது. எனவே இப்பால்நிலை வேறுபாடானது எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் வாழ்வியல் என பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. உயிரியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் பார்த்தால் ஹோர்மோன்கள் தான் எமக்கான குணாம்சங்களைத் தீர்மானிப்பவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஏனைய விலங்குகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துகின்றன.

ஆனால் சமூக ஆய்வு முடிவுகள் இதற்கு எதிர்மாறானவை. நடத்தை வழி தான் ஹோர்மோன் சுரப்புக்களேயன்றி ஹோர்மோன் வழி நடத்தைக் கோலங்கள் உருவாக மாட்டாது. எனவே இதிலிருந்து நிச்சயம் சமூகமயமாக்கல் செயற்பாடு தான் பால்நிலைப் பாகுபாடுகளை சமூகத்தில் உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு எம்மால் வர முடியும். அதனடிப்படையில் இன்றைக்கு ஆண், பெண் என சமுகம் பிரித்து நோக்குகின்றது. பெண் என்பவள் ஆணை விட பலவீனமானவள் என்றும், ஆணுக்கு பெண் அடிபணிந்து தான் இருக்க வேண்டும் எனவும் சமூகம் அவளை மாற்றி விட்டது எனலாம். அடுப்பங்கரை பெண்களுக்கான இடம் என ஒதுக்குகின்றனர். சமையல் தான் பெண்கள் வீட்டில் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர் .

பெண்கள் தான் சமைக்க வேண்டும். ஆண்கள் அடுப்பங்கரையில் நிற்பதே அவமானம் என எண்ணுகின்றனர். அதுமட்டுமன்றி உணவு பரிமாறும்போது கூட பெண்களை விட ஆண்ககளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். கேட்டால் அவன் ஆண் பிள்ளை வெளியில் செல்பவன் வேலை செய்ய சக்தி தேவை என்பர். ஏன் பெண்கள் மட்டும் வீட்டில் வேலை செய்வதில்லையா? சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர். சமூக மாற்றங்களால் ஆண்கள் பாலியல் சுதந்திரம் கொண்டவர்களாக மாற்றடைந்தனர் .

பிள்ளை பிறந்தவுடனே சமூகத்தில் பிரிவினையைக் கொண்டுவந்து விடுகின்றனர். குறிப்பாக ஆண் பிள்ளை என்றால் நீல நிற உடை, பொருள் எனவும், பெண் பிள்ளை என்றால் பிங்க் நிற உடை பொருள் எனவும் பிரிக்கும்போதே பால்நிலை வேறுபாடு ஆரம்பமாகி விடுகின்றது.

விளையாட்டுப் பொருட்களிலும் கூட ஆண்களுக்கு வாகனப் பொருட்கள், பெண்களுக்கு சமையல் சார்ந்த விளையாட்டு பொருட்கள் என ஒதுக்கி விடுகின்றனர். எனவே பெண் என்றால் சமைப்பது மட்டுமே என்ற பிரிவினையை சிறு வயதிலேயே ஏற்படுத்தி விடுகின்றனர். பெண்ணின் வாய்த்தர்க்கமும் அவள் கொண்ட பிடிவாத குணமும் அடுப்படிக்கும், அலங்கார அறைக்கும் மட்டுமே தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்துபவர்களாகப் பெண்கள் இன்று வரை காணப்படுகின்றனர்.

அத்தோடு பெண்ணாக பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்கின்ற தன்மையும் ஆரம்ப காலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது கூடுதலாகப் பிறப்பது பெண்ணாக ருப்பதை விட ஆண் பிள்ளையையே அதிகமாக எதிர்பார்க்கின்றனர். பிள்ளை கருவில் இருக்கும் போதே ஆணா? பெண்ணா? என அறிந்துக்கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது.

ஆண் குழந்தை எனில் ஆண் குழந்தையென மிடுக்குடன் சொல்வதும் அதுவே பெண் குழந்தை பிறந்துள்ளதெனில் பொம்பிளப் பிள்ளையாம் என ஒருவித சலிப்புடன் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது. அவளுக்கென்ன ஐஞ்சும் ஆம்பிளப் பிள்ளையாப் பெத்துப் போட்டாள், கெட்டிக்காரி, வயசுபோன காலத்தில் இருத்தி வைச்சு சாப்பாடு குடுப்பாங்கள் என ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பாராட்டுவது சமூக வழமையாயுள்ளது. ஆனால் பெண்பிள்ளைகள் வரிசையாக ஐந்தினைப் பெற்றுவிட்டால், “ஐஞ்சும் பொம்பள பிள்ளயாப் போச்சே என வருத்தப்படுவதுமுண்டு.

இதனையே “அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்” என்று கூறுவர் அதுமட்டுமன்றி பொட்டப்புள்ளைக்கு எதுக்கு படிப்பு ? என்று பெண்களின் படிப்பிலும் கூட வேறுபாட்டை உருவாக்கி விட்டனர். சமூகத்தில் மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பால்நிலை வேறுபாடு காணப்படுகின்றது. அந்த வகையில் பொருளாதாரம் எனும் போது பெண்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கயே காணப்படுகின்றனர். காரணம் எப்போதும் பொருளாதாரத்தில் ஆண்கள் மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற ஒரு கருத்து தற்கால சமூகத்தில் காணப்படுகின்றது. எனவே பொருளாதார ரீதியில் பார்க்கும்போது பெண்களுடைய திறமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.

அதுமட்டுமன்றி நிறுவனங்களில் பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் போது அவர்களுக்கு கீழே வேலை செய்வதையே ஆண்கள் தமது கௌரவக் குறைச்சலாக எண்ணுகின்றனர். தான் ஒரு பெண்ணுக்கு கீழே சென்று வேலை பார்ப்பதா என்று நினைக்கின்றனர். ஆகவே ஒரு பெண்ணானவள் தனக்கு திறமை இருந்தும், தம்மால் உயர்ந்த ஒரு பதவியில் தலைமைத்துவத்தை கொண்டு நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட சமூகத்தில் பெண் என்ற ஒரு பால்நிலை வேறுபாட்டினை ஏற்படுத்தி பெண் எப்போதும் ஆணுக்கு அடிமையாக அவனுக்குக் கீழே வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அல்து ஒரு கட்டமைப்பை சமூகமானது உருவாக்கியுள்ளது .

அதுமட்டுமன்றி இன்றைய நிலையில் பெண்ணானவள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அது தன்னுடைய நிலையிலிருந்து தன்னைக் கீழிறக்கிக் கொள்வதாக ஒரு ஆண் எண்ணுகின்றான். ஆகவே எப்போதும் ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் தன்னை தன் குடும்பத்தை வளர்க்கக் கூடாது என ஆண் சமூகமானது எண்ணுகின்றது. இப்படி எத்தனையோ தடைகளை மீறி ஒரு பெண் தனது குடும்பச் சூழல் காரணமாக தனது சுமையைக் குறைப்பதற்கு வேலைக்கு செல்லும் போது, அவளை சமூகமானது வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றது .

ஆனாலும் கூட எல்லாத் தடைகளையும் தகர்த்து இன்றைக்கு பெண்ணானவள் பல துறைகளில் சாதனை புரிந்து கொண்டிருப்பது என்பது மிகவும் நம்பிக்கை தரக்கூடிய, மிகவும் சந்தோஷமான ஒரு விடயமாகவே காணப்படுகின்றது .

இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு பெண்களின் திறமைகள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளன இன்றைக்கு நாட்டில் மிகவும் முக்கியமான ஒரு துறைகளில் ஒன்றாக காணப்படுவது அரசியல் துறையாகும் . ஆகவே அரசியல் துறைகளிலும் கூடப் பால்நிலை வேறுபாடுகள் காணப்படுவதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

குறிப்பாக பாராளுமன்றத்தில் மட்டுமன்றி மாகாண சபைகளில் கூட, இன்றைக்கு பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது . இன்றைக்கு அதிகமாக இலங்கையை பொறுத்தளவில் அரசியல் துறைகளில் பிரகாசிக்கவர்களாக ஆண் வர்க்கத்தினர் காணப்படுகின்றனர் .

ஒரு தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. காரணம் பெண்கள் மட்டுமே என்று நினைத்து அவர்களுக்கு அரசியல் என்பது முற்றுமுழுதாக சாத்தியமற்றது என்றும் அரசியல் பற்றிய விடயங்களில் அவர்களுக்கு தெளிவு இல்லை என நினைப்பதும் ஆகும். ஒரு வீட்டில் அனைத்து குடும்பத்தினரையும் தலைமைத்துவமாக இருந்து கட்டி எழுப்புகின்ற ஒரு பெண்ணால் ஒரு நாட்டில் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப முடியாது என்ற என்று எண்ணுகின்ற போது தான் பால்நிலை வேறுபாடு என்பது அங்கு ஆரம்பிக்கின்றது .

ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூகச் சூழலில், தலைமைத்துவமிக்க பெண்களின் உருவாக்கம், ஒரு வகையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எனும்போது துன்புறுத்தல், பாலியல் லஞ்சம், மிரட்டுதல், உடல்ரீதியாக தாக்கப்படுதல், எச்சரிக்கை, அழுத்தங்கள், பண்பற்ற முறையில் சமூக வலைதளங்களில் பூசுதல் போன்ற காரணங்களாலேயே பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது என்பது மிகவும் சவாலாக காணப்படுகின்றது.

எனவே ஆரம்ப காலம் முதல் தற்காலம் வரையிலும் ஆண்களை உயர்ந்தவர்களாகவும், பெண்களை ஒரு போதைப் பொருளாகவும் பார்ப்பதற்கான காரணம் என்ன?. ஆண், பெண் என்று இயற்கையில் படைக்கப்பட்ட மனித உருவமானது உடற் கூற்றினால் வேறுபட்டு காணப்படுவதனால் சமூகத்தில் இவ்வாறான ஒரு பாரிய வேறுபாடு தோன்றுவதற்கு காரணமாக அமைந்துள்ளதா? என்பதை நாம் ஆராய வேண்டும்.

சமத்துவம் பற்றிய கோரிக்கைகளும் போராட்டங்களும் வளர்ந்த வண்ணம் உள்ள இத்தருணத்தில் ஆண், பெண் என்ற ஒரு பாலின வேறுபாடானது சமூகத்தில் இன்னமும் வளர்ச்சியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இரு கண்களும் ஒரே விதமாக இருக்கும் பட்சத்தில் பார்வைகளில் வித்தியாசப்படுத்தி பார்ப்பது என்பது மிகவும் தவறான ஒன்றாகும். அதுபோலவே ஆண் பெண் என்ற மனித பிறவியில் ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டினை ஏற்படுத்தி பார்ப்பது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயலாகவே காணப்படுகின்றது .

சமூகத்தைப் பொறுத்தவரையில் பாலின வேறுபாடு என்பது முதலில் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆகவே முதலில் குடும்பத்தைப் பொருத்தவரையில் பால்நிலை வேறுபாடானது தவிர்க்கப்பட வேண்டும். பின்னர் இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் நிறுவனங்களான பாடசாலை, ஊடகங்கள், சமயம், கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் போன்ற காரணங்களின் மூலமாக இந்தப் பால்நிலை வேறுபாடானது முழுமையாக தகர்க்கப்படல் வேண்டும் .

பெண்ணுரிமை பற்றிய கோஷங்களும் பெண்களுக்கான பாடல்களும் வளர்ந்த வண்ணம் காணப்பட்டாலும் கூட பெண்கள் என்பவர்கள் சமூகத்தைப் பொறுத்தவரையில் பின் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தினராகவே காணப்படுகின்றனர்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனித இனமானது முன்னேறிக் கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் பால்நிலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது இச்சமூகம். இந்த நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது . மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற கருத்திற்கு இணங்க சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனுடைய மாற்றமுமே பால்நிலை வேறுபாட்டினை மாற்றக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது .

எனவே சிறுவயதிலிருந்தே ஆண்களுக்கான குணங்கள், பெண்களுக்கான குணங்கள் என வேறுபடுத்தி பிள்ளைகளை வளர்க்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான பால்நிலை வேறுபாடுகள் சமூகத்தில் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே இவ்வாறான நிலை வேறுபாட்டினை சமூகத்திற்குள் இருந்து தூக்கியெறியும் பட்சத்தில் பல புதுமை பெண்களும், பல புரட்சிப் பெண்களும் உருவாவதற்கு காரணமாக அமையலாம். ஆகவே இக்காலத்தில் பெண்கள் தது திறமைகளின் ஊடாக சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான ஒரு முக்கியமான விடயமாக இந்த பாலின வேறுபாடு என்பது தகர்க்கப்பட வேண்டும்.

ர. பிரஷாஹினி

நான்காம் வருடம்

ஊடக கற்கைகள் துறை | யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *