உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மனிதநேயம் நிறைந்த கண்ணியமான மனித அன்பை கட்டியெழுப்புவதற்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முஹம்மது நபி நாயகம் அவர்கள் இஸ்லாமிய விழுமியங்களின் அமைப்பை நிறுவிய முன்னோடியாவார் என்பதுடன், பிறரின் நம்பிக்கையை வென்றெடுத்தமையால் அவர் அல் அமீன் என்று அறியப்பட்டார் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய இஸ்லாமியர்களால் அனுஷ்டிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபி அவர்களின் ஜன்ம தினமான மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இன்று (19) விடுத்துள்ள செய்தியில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

.இஸ்லாமிய போதனைகளின்படி, காலத்திற்கு காலம் இறைவனால் அனுப்பப்படும் இறை தூதர்களில் முஹம்மது நபி இறுதி தூதராவார்.

முஹம்மது நபி நாயகம் அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அறிவார்ந்த புரட்சியால் இல்லாதொழித்து சமத்துவத்திற்காக அயராது உழைத்த ஒரு அறிஞராவார். நபி நாயகம் அவர்கள் ஊழல் நிறைந்த சமுதாயத்தில் அல்லாஹ்வின் தூதராக இருபத்தி மூன்று ஆண்டுகள் இறை பணியைச் செய்தார்கள்.

உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகள் மத்தியில், நபி நாயகத்தின் நோக்கமானது மனித சமுதாயத்தை நல்லொழுக்கம் மற்றும் அகிம்சையால் நிரப்புவதாகும்.

உலக வாழ் மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டுவதே இறை தூதரான நபி நாயகத்தின் போதனையின் சாராம்சமாகும். அவ்வழி செல்லும் அனைத்து முஸ்லிம் மக்களும் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப தங்கள் பங்களிப்பை உச்ச அளவில் வழங்க முடியும் என்பது தனது நம்பிக்கையாகும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

கொவிட் தொற்றை எதிர்கொண்டு நாம் கடந்துச் செல்லும் இந்த கடுமையான காலத்தை வெற்றி கொள்வதற்கு நபி நாயகம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு முஸ்லிம் மக்களுக்கு நினைவூட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, ஏழை மக்களுக்கு உதவி செய்து நபி நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அந்த செய்தியில் மேலும் கூறியுள்ளார். (kandytamilnews.com)

Post a Comment

Previous Post Next Post