
மெகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 தமிழ் கைதிகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சந்தித்து பேசியுள்ளார்.
மெகசின் சிறைச்சாலைக்கு இன்று (14) சென்றிருந்த மனோ கணேசன் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
உணவுத் தவிரப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுவதாயின் தங்களின் விடுதலை குறித்து சட்ட மாஅதிபரின் உறுதிமொழியை கோருகிறார்கள் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இன்றி சட்டமா அதிபர் தலையிட மாட்டார் என அவர்களுக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
ஆகவே ஜனாதிபதியுடன் கடந்த 19ம் திகதி (19/08/2022) சனிக்கிழமை தாம் சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்க் கைதிகள் விவகாரம் பற்றியும் பேசியதாக, உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வருவதற்கு முதல் காத்திரமான நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது என தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் முதல் நடவடிக்கையாக அரசியல் கைதிகள் விடுதலையை நாம் பரிந்துரைப்பதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எஞ்சியிருக்கும் தமிழ் கைதிகளை பிணை, வழக்கு வாபஸ், பொதுமன்னிப்பு ஆகிய முறைகளில் விடுவிக்கும் காலம் உதயமாகி விட்டது என்ற நம்பிக்கையுடன் இருக்குமாறு கைதிகளிடம் தாம் கேட்டுக் கொண்டதாக மனோ கணேசன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.